Mon - Fri: 10:00AM - 4:00PM / Closed on Weekends info@pledgetorestore.org

*கொரோனா மூன்றாம் அலை நிவாரணப் பணி – 07.07.2021 *

கொரோனா மூன்றாவது அலையில் போக்குவரத்து தடை காரணமாக வருமானத்தை இழந்து பாதிக்கப்பட்ட மிகவும் வறிய குடும்பங்களுக்கன அவசர உலர் உணவு விநியோகம்

அம்பாறை மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பகுதிகளான பொத்துவில், திருக்கோயில், ஆலையடிவேம்பு, காரைதீவு, சம்மாந்துறை, கல்முனை, நாவிதன்வெளி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் இருந்து மிகவும் வறுமையான குடும்பங்களை தெரிவு செய்து முதலாவது அவசர நிவாரண உதவிகள் குறைந்தது 300 குடும்பங்கள் என்கின்ற இலக்கை நிர்ணயித்து 06.06.2021 அன்று இந்த அவசர நிவாரண உதவிக்கான குழு உருவாக்கப்பட்டது.

இந்தக் குழுவில் Pledge to Restore Foundation, S.T.E.P.S, People Helping People Foundation, People Welfare Association and ABCD நிறுவனம் ஆகிய தன்னார்வ அமைப்புகளுடன் திரு கோகுலன், திரு பகிரதன், திரு.ஆதவன், திரு. மயூரன், திரு.அசோக், திரு.மாறன்,  திரு.தீபன், திரு.நிரோயன் ஆகிய தன்னார்வ சமூக நலன் விரும்பிகளும் இந்த அவசர நிவாரண உதவிக்காக தங்களுடைய பங்களிப்பை செய்திருந்தனர்

இந்தக் குழு உருவாக்கப்பட்டு வாட்ஸ்அப் தொடர்பாடல் மூலமாக ஒரு வாரத்திற்குள் நாம் எதிர்பார்த்த 300 அவசர உலர் உணவு பொதிகள் என்கின்ற இலக்கையும் தாண்டி 422 உலர் உணவு பொதிகள் வழங்கக்கூடிய அளவு நிதி கிடைக்கப்பெற்றது இந்த நிதி ஊடாக மேற்குறிப்பிடப்பட்ட 7 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் உள்ள தன்னார்வ சமூக செயற்பாட்டு குழுவினரை ஒருங்கிணைத்து Zoom இணையவழி கலந்துரையாடல்கள் ஊடாக ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் ஒரு இணைப்பாளர்கள் தெரிவு செய்தோம். இந்த இணைப்பாளர்களின் இணைப்பாக்கத்தின் ஊடாக ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனி குழுக்களாக இந்த அவசர உலர் உணவு விநியோகம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஒவ்வொரு பிரதேசத்திற்கும் தனித்தனியாக செயற்பட்ட குழுவினர் மிக விரைவாக அந்தந்த பகுதியிலேயே குறிப்பாக உள்ளூரிலேயே கிடைக்கக் கூடிய அவசர அவசிய உலர் உணவுகளை சேகரித்து பொதிகள் ஆக்கப்பட்டு உடன் விநியோகத்திற்கு தயார் செய்தனர்.

உலர் உணவு பொதிகளை தயார் செய்து கொண்டிருக்கின்ற அதே நேரத்தில் பிரதேச செயலாளர்களின் அனுமதிகளை பெற்றுக் கொண்டதுடன் அந்தந்த பிரதேச செயலகங்களின் வழங்கப்படுகின்ற அவசர உலர் உணவு திட்ட நடைமுறைகளுடன் சிறந்த இணைப் பாகத்தையும் ஏற்படுத்திக்கொண்டு ஒவ்வொரு பகுதிகளிலும் அவசர உலர் உணவு விநியோகம் மிகவும் சிறப்பாக நடைபெற்றன.

உலர் உணவு பொதிகள் செய்வதில் குறிப்பாக உள்ளூரிலேயே கிடைக்கக் கூடிய உணவுப் பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது

அத்துடன் உள்நாட்டு மரக்கறி விதைகளை பெற்றுக்கொள்வதில் அதிக ஆர்வத்தை காட்டி இருந்தோம். தொடர்ந்து போக்குவரத்து தடை மேற்கொள்ளப்படுமாகஇருந்தால் வீட்டுத் தோட்ட செய்கை ஊடாக வீட்டுக்கு தேவையான மரக்கறிகளை உற்பத்தி செய்கின்ற அளவு மரக்கறி விதைகளை தனியாக பொதிசெய்து உலர் உணவுடன் சேர்த்து வழங்கப்பட்டது.

இதன்படி

  1. காரைதீவு 12.6.2021

2.திருக்கோயில் 12.6.2021

3.பொத்துவில் 13.6.2021

4.சம்மாந்துறை 13.6.2021

5.கல்முனை 13.6.2021

6.நாவிதன்வெளி 15.6.2021

7.ஆலையடிவேம்பு 21.6.2021

ஆகிய பிரதேச செயலகங்களில் அவசர உலர் உணவு விநியோகம் பிரதேச செயலகத்துடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்டன.

 

இந்த உலர் உணவு விநியோகத்திற்கான பெரும்பான்மையான போக்குவரத்து செலவுகளை அந்தந்த பகுதியில் இருக்கின்ற பிரதேச இணைப்பாளர்களின் பங்களிப்பாக  வழங்கப்பட்டு இருக்கின்றது என்பது ஒரு விசேட அம்சமாகும்

பிரதேச  இணைப்பாளர்கள்

1.காரைதீவு – தி.ரு.S.கிறிஸ்டோபர்

2.திருக்கோயில் – திரு. S. வீரமணி, திரு.சேந்தன், திரு.தினேஷ்,

3.பொத்துவில் -திரு.T.நிஷாந்தன்

4.சம்மாந்துறை – திரு.S.செல்வமணி

5.கல்முனை – திரு.K.செல்வராஜ், திரு.K.வரதராஜன்

6.நாவிதன்வெளி -திரு.S.E.தேவபாலன்

7.ஆலையடிவேம்பு – திரு. S.வீரமணி, திரு.R.விக்னேஸ்வரன்

 

 *அவசர நிவாரண உதவிகள் வழங்குகின்ற போது பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னூட்டல்கள்

 

  1. பின்தங்கிய கிராமங்களில் போக்குவ தடை காரணமாக போதிய உணவு கிடைக்கப்பெறாத காரணத்தால் உள்ளூர் மரக்கறிகளையும் குளங்களில் இருக்கின்ற மீன்களையும் மக்கள் உணவாக உட்கொண்டுள்ளனர் (பொதுமக்களுக்கும் குளத்தில் மீன் பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது)
  2. இதுவரை அரச மற்றும் தனியார் அமைப்புகள் ஊடாக வழங்கப்பட்ட அவசர உணவுகள் குறிப்பிட்ட சில குடும்பங்களுக்கு மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளது. ஏனைய வறுமையான குடும்பங்கள் தொடர்ந்து உணவிற்காக ஏங்குகின்ற நிலையே தொடர்ந்து நீடிக்கின்றன
  3. நிவாரண உதவிகளை வழங்குகின்ற குழுவினர் குறிப்பிட்ட சில குடும்பங்களுக்கு மட்டுமே வழங்குவதற்கு தெரிவு செய்திருந்த போதிலும் மிகவும் வறுமையான குடும்பங்களுக்கு தங்களால் நிவாரணம் வழங்க முடியவில்லையே என்கின்ற மன உளைச்சலுடன் கிராமத்தை விட்டுத் திரும்பினார்கள்
  4. கைக்குழந்தைகளை வைத்திருக்கின்ற குடும்பங்களுக்கு பால்மா தேவை இருப்பினும் எமது குழுவினரால் குழந்தைகளுக்கான உதவிகள் வழங்க முடியவில்லையே என்ற மன உளைச்சலும் அதிகமாகவே இருந்தது.
  5. சிறிய அளவில் பயிர்ச்செய்கையை மேற்கொண்ட விவசாயிகளுக்கு போதுமான உரம் இல்லாமையால் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதில் தடங்கள் இருப்பது அவதானிக்கப்பட்டன.
  6. உணவு தட்டுப்பாடு நிலவுகின்ற அதேவேளை மறுபக்கத்தில் மாணவர்கள் இணையவழி ஊடாக கல்வியை தொடர முடியாது மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கின்றார்கள் என்கின்ற சூழல் கிராமங்களிலே ஆங்காங்கே அவதானிக்கப்பட்டன.
  7. அரச சார்பற்ற அமைப்புக்களின் உதவிகளை மக்களுக்கு வழங்குவதில் பிரதேச செயலகங்கள் ஆர்வத்துடன் செயல்பட்டனர்.

 

 *குழுவின் பரிந்துரைகள்

 

  1. அனைத்து கிராமங்களிலும் வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கையை ஊக்கப்படுத்துவதற்கான திட்டங்களை உருவாக்குதல்
  2. வீடுகள் தோறும் சேதனப் பசளை உற்பத்தியை உருவாக்குவதற்கான செயல்வடிவத்தை உருவாக்குதல்
  3. கிராமங்களில் சேதனப் பசளை உற்பத்தியையும் நஞ்சற்ற பயிரிச்செய்கை திட்டத்தையும் ஒருங்கிணைந்து மேற்கொள்வதற்கு மக்களை ஊக்குவித்தல்
  4. உள்ளூர் வளங்களை உச்ச அளவில் பயன்படுத்தி கிராமத்தின் பொருளாதார வளர்ச்சியை மேற்கொள்வதற்கான முன்மாரி திட்டங்களை உருவாக்குதல்.
  5. சிறிய குளங்கள் தொடக்கம் பெரிய குளங்கள் வரை மீன் வளர்ப்பு திட்டத்தை ஊக்கப்படுத்தல்.
  6. வறட்சியில் இருந்து பாதுகாத்து உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதற்கான சிறிய அளவிலான அணைக்கட்டுகளை உருவாக்கி நீரைச் சேமிப்பதற்கான திட்டங்களை உருவாக்குதல்
  7. வறுமையிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான சிறந்த அணுகுமுறைகளை உருவாக்குவதற்கான முன்னாயத்த பணிகளை மேற்கொள்வதற்கான தேவையான தரவுகளை சேகரித்து சரியான திட்டங்களை உருவாக்குதல்.

 

நன்றி

R.Vigneswaran

Director Ampara,

Pledge to Restore Foundation

திருகோணமலை Covid-19 நிவாரணப்பணி

திருகோணமலையில் எமது சமூகப்பணியாக covid -19 அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கானநிவாரண உதவி 21/06/2021 வழங்கப்பட்டது. இவ் செயற்த்திட்டத்திற்கு Pledge to Restore Foundation அமைப்பின் மூலம் உதவித் தொகையாக ரூபா 200,000 வழங்கப்பட்டது.

எம் உறவுகளுக்கான இப்பணியினை வழங்க முன்வந்தமைக்கு  எமது நன்றிகள். இதற்குஅமைவாக மிகவும் பின்தங்கிய கிராம உள்ள வறுமைக் கோட்டிற்குட்பட்ட மக்களுக்கான நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது.

வறுமைக் கோட்டின் கீழ் உள்ள குடும்பங்களின்  பெயர்விபரங்கள் கிராம உத்தியோகத்தர் , கிரமாஅபிவிருத்திச்சங்கள் இணைந்து தெரிவு  செய்யப்பட்டது. இத்தெரிவானது திருகோணமலை மாவட்ட பட்டினமும்சூழலும் பிரதேச செயலகப்பிரிவுக்கு உற்பட்ட விளாங்குளம் 34 குடும்பங்களும், கிராம உத்தியோகத்தர் பிரிவும் மூதூர் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பள்ளிக்குடியிருப்பு –தங்கபுரம் 100 குடும்பங்களும் கிராம உத்தியோகத்தர் பிரிவும் தெரிவு செய்யப்பட்டது.

தெரிவு செய்யப்பட்ட பயணாளிகளுக்கான உலர்உணவு பொதிகள் கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் அவர்களின்தலைமையில் கிராம அபிவித்தி சங்கங்களின் ஊடாக திருகோணமலை பட்டனமும்  சூழலும் பிரதேசசெயலகத்திற்கு உற்பட்ட  விளாங்குளம் கிராமத்தில் காலை 10.30 மணிக்கும். மூதுர்ர் பிரதேச செயலகத்திற்குஉற்பட்ட  தங்கபுரம் கிராமத்தில் பி . ப 2 மணிக்கும் வழங்கப்பட்டது.

மேற்படி   மக்களுக்கான நிவாரணப்பணியில் சமூக குழுக்கள் இளைஞ்ஞர்கள்,யுவதிகள் தொண்டர் அடிப்படையில் தங்கள் பங்களிப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொதியில்.

1.அரிசி – 5 கிலோ.

2.கோதுமைமா- ​1.5 கிலோ

3.சீனி​ – 1 கிலோ

4.பருப்பு​   ​ 1 கிலோ

5.சோயா​ – 400 கிரோம்

6.சோப். – ​​2

7.ரிங்சோ – 400 கிரோம்

8.ஈவா​ – 1 பக்கட்

இவ் நிவாரணப்பணியினை சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு உதவிய அனைத்து புலம் பெயர்உறவுகளுக்கும் எனது அன்பான நன்றியுடன் ஒற்றுமையின் குரல் உறவுகளின் பங்களிப்பு  சிறப்பான வழிமுறை.

 

நன்றி

க.சூரியா.

திருகோணமலை

நிவாரண பொதி கோரல் கோரளைப்பற்று கிரான் மட்டக்களப்பு

கோரளைப்பற்று கிரான்

Covid-19 அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உளர் உணவுப் வழங்கல் கோரளைப்பற்று கிரான் மட்டக்களப்பு பிரதேச சேலக பகுதிகளில் வழங்கப்பட்டுள்ளது.

நிவாரண பொதி கோரல் மண்முனை வடக்கு மட்டக்களப்பு

Covid-19 அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உளர் உணவுப் வழங்கல் மண்முனை வடக்கு மட்டக்களப்பு பிரதேச சேலக பகுதிகளில் வழங்கப்பட்டுள்ளது.

நிவாரண பொதி கோரல் கோறளைப்பற்று மட்டக்களப்பு.

Covid-19 அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உளர் உணவுப் வழங்கல் கோறளைப்பற்று மட்டக்களப்பு பிரதேச சேலக பகுதிகளில் வழங்கப்பட்டுள்ளது.

 

நிவாரண பொதி கோரல் மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை மட்டக்களப்பு

தற்போது நாட்டில் நிலவி வரும் covid-19 தொற்று பாதிப்பு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நலிவுற்று இருக்கும் மக்களுக்கு நிவாரண உதவிகள் அவசரமாகவும், அவசியமாகவும் வழங்கப்பட வேண்டிய தேவை வந்தபோது அதன் அவசியம் அவசியத்தை அறிந்து செயல்பட வேண்டிய தேவையும் இருந்தது.

இதன்பொருட்டு மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை மட்டக்களப்பு

பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொதிகள் PLEDGE TO RESTORE FOUNDATION டாக வழங்கப்பட்டுள்ளது.

உதவி கோரல் – பிரதேச செயலகம் போரதீவுப்பற்று மட்டக்களப்பு.

Covid-19 அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உளர் உணவுப் வழங்கல் போரதீவுப்பற்று பிரதேச சேலக பகுதிகளில் வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி விடயம் தொடர்பாக நாட்டில் தற்போது நிலவுகின்ற covid-19 அசாதாரண சூழ்நிலை காரணமாகவும் பயண தடை மற்றும் முடக்க நிலைமை காரணமாகவும் நிரந்தரமான வருமானம் இன்றி நிலையில் போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் நமது அன்றாட உணவு தேவை கூட ஈடு செய்ய முடியாத நிலையில் பல குடும்பங்கள் கஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

அவ்வாறான அவசரமான அத்தியாவசிய உணவு தேவைகளை எதிர்நோக்குகின்ற 215 குடும்பங்களுக்கு அத்தியவசிய உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளது.

 

Covid-19 உலர் உணவு விநியோகம்

மூவாயிரம் ரூபாய் பெறுமதியான ஆயிரம் பொதிகள்.

வவுணதீவு கரையாக்கனா தீவு கிராமத்தில் கிராமசேவகர் தலைமையில் உலர் உணவு வழங்களின்போது.  உறங்கா விழிகள் தொண்டு நிறுவனம் அமைப்பின் நிதி பங்களிப்பின் ஊடாக இந்த உலர் உணவு விநியோகம் சிறப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் covid-19 இதற்கு காரணங்களாக வீடுகளில் முடக்கப்பட்டிருக்கும் மக்களுக்கான உலர் உணவு விநியோகம். 3000 ரூபாய் பெருமதியான பொதிகை வழங்கப்பட்டது. கிராம சேவகர் தலைமையிலும் இந்த உணவு பொதிகள் பெண் தலைமை கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

வெல்லாவெளி பிரதேசத்தில் உள்ள 40 கிராம சேவகர் பிரிவுகளில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு உலர் உணவு விநியோகம் வெல்லாவெளி மற்றும் வவுணதீவு பிரதேசங்களில் ஜூன் மாதம் ஐந்தாம் திகதி மற்றும் ஆறாம் திகதி ஆகிய நாட்களில் இந்த விநியோகம் செய்யப்பட்டு இருக்கின்றது.

 மட்டக்களப்பு அரசு அதிபர் பிரதேச செயலாளர்கள் ஆகியோர் அனுமதியுடன் மற்றும் அவர்களின் வழிநடத்தலின் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று இருக்கின்றது.

கல்வி பொது தராதர சாதாரண மாணவர்கள் கல்வி நடவடிக்கைக்கான உதவி கோரல்

ப. உதயன் அவர்கள்,
பிளேஜ் றீ நிஸ்ரோர்,
அவுஸ்திரேலியா.

கல்வி பொது தராதர சாதாரண மாணவர்கள் கல்வி
நடவடிக்கைக்கான உதவி கோரல்

கொரோனா தொற்று காணரத்தினால் 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற இருந்த
க.பொ.த சா/த பரீட்சையானது எதிர்வரும் மார்ச் மாதம் 22ம் திகதி முதல்
நடாத்துவதற்கு இலங்கை கல்வித் திணைக்களம் தீர்மானித்துள்ளதனால் கஸ்டப்
பிரதேசங்களில் வசிக்கும் மேற்படி மாணவர்கள் 500 பேருக்கு மாதிரி
வினாத்தாள்களை விநியோகம் செய்து அதனூடாக கல்விச் செயற்பாட்டினை
ஊக்கப்படுத்துவதன் மூலம் அவர்களது அடைவு மட்டத்தில் தேர்ச்சியடையும்
மாணவர்களது எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்பது எமது நிலைப்பாடாகும்.

குறிப்பாக சென்ற வருடம் முழுவதும் கொவிட் – 19 தொற்று உலகளாவிய ரீதியில்
பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்ததன் காரணத்தினால் பாடசாலை நடைபெற்ற
நாட்கள் குறைவாக காணப்படுவதுடன் தனியார் கல்வி நிலையங்களும்
இயங்கமுடியாத ஒரு சூழல் ஏற்பட்டு இருந்தது. இதன் காரணத்தினால் மாணவர்களது
கல்விச் செயற்பாட்டில் பாரிய வீழ்ச்சி காணப்படுவதன் காரணத்தினால் நாம் மேலே
குறிப்பிட்டது போல மாதிரி வினாத்தாள்களை தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் ஊடாக
வழங்கி கற்பிப்பதன் மூலம் இவ் வீழ்ச்சியினை ஓரளவு மேம்படுத்தலாம் என
நினைக்கின்றேன்.

இது போன்ற செற்பாடுகள் கடந்த காலங்களிலும் நாம் மேற்கொண்ட அனுபவங்களின்
ஊடாக இதனை சிறப்பாக செய்யலாம் என நினைக்கின்றேன். எனவே கீழ் காணும்
பாடங்களுக்கான மூலப் பிரதிகளை யாழ்ப்பாணத்தில் பிரதியீடு செய்து எடுத்து
மேலதிக தேவைக்கான பரீட்சை தாள்களை நாம் மட்டக்களப்பில் பிரதி எடுக்கலாம்
என அறியத்தருகின்றேன்.

தேவையான மாதிரி வினாத்தாள்கள்
1. கணிதம் – 1 + 500
2. ஆங்கிலம் – 1 + 500
3. விஞ்ஞானம் – 1 + 500
4. வரலாறு – 1 + 500
5. தமிழ் – 1 + 500

 

இதனடிப்படையில் மூலப் பிரதி ஒன்றினை தயாரிப்பதற்கான செலவு
3000 x 5 = 15000.00

ஒரு பாடத்திற்கு 5 தொடக்கம் 8 பக்கங்களைக் கொண்டதாக இருக்கும் ஒரு
பேப்பர் பிரதி எடுப்பதற்கு 2.00 ரூபாய்கள் செலவாகும் சராசரி ஒரு பாட பக்கங்கள்
8 x 2 = 16.00 ரூபாய்.

ஒரு பாடத்தில் 500 x 16 =  8000.00 ரூபாய்கள்.

ஐந்து பாடங்களுக்கும் 8000 x  5  =  40000.00 ரூபாய்.

ஆசிரியர்களுக்கான ஊக்குவிப்பாக ஒருவருக்கு ஒரு பாடத்திற்கு 2000
ரூபாயானால் ஒரு வகுப்பறையில் சராசரி 50 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரானால்
50 x  10 =  500 (500/5 = 50) இதனடிப்படையில் 10 x 2000 = 20000.00.

ஐந்து பாடங்களுக்கும் 20000 x 5 = 100000.00.

மற்றும் போக்குவரத்து செலவாக = 10000.00

மேற்படி திட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் ஏற்படும் செலவு விபரம் வருமாறு:

1. மூலப்பிரதிக்கான செலவுகள் 3000 x 5 = 15000.00.

2. பிரதி எடுப்பதற்கான செலவுகள் 8000 x 5 = 40000.00.

3. ஒரு பாடத்துக்கு 500 பேப்பர் வீதம் ஆசிரியர்
கொடுப்பனவு
20000 x 5 = 100000.00.

4. போக்குவரத்து செலவாக 10000.00

மொத்தம் = 165000.00

குறிப்பு
சில இடங்களில் ஆசிரியர் கொடுப்பனவுகளை குறைத்து வழங்குவதற்கு வாய்ப்புக்கள்
உண்டு.
நன்றி

கஞ்சிகுடியாறு குளத்தில் மீன் குஞ்சு கள் 180 கிராம்  வளர்ச்சி- Progress Report January 2021.

29.01.2021

*கஞ்சிகுடியாறு குளத்தில் மீன் குஞ்சு கள் 180 கிராம்  வளர்ச்சி*

 

நிதி அனுசரணை:- அன்பு நெறி USA

இணைப்பாக்கம்:- IMHO USA மற்றும் Pledge to Restore

அனுசரணை:- Assist RR (SL)

தொடர் கண்காணிப்பு:- Pledge to Restore

திட்டம்:- கஞ்சிகுடியாறு குளத்தில் மீன் குஞ்சுகளை வளர்ப்பதன் ஊடாக கஞ்சிகுடியாறு  கிராம மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல்.

குளத்தின் அளவு:- 280 ஹெக்டேயர்

குளத்தின் நீர் கொள்ளளவு:- 5100 Acre feet

நீர் தேக்கக்கூடிய அளவு:- 20′

பயனாளிகள்:- 85 மீன்பிடியாளர்கள்.

24.11.2020ல் 50 ஆயிரம் மீன் குஞ்சுகள் (குளத்தில் விடுகின்ற போது 1 – 2 cm அளவில் இருந்தது) விடப்பட்டு இரண்டு மாதம் நிறைவடைந்து இருக்கின்ற நிலையில் தற்போது 150 – 180 கிராம் அளவில்  வளர்ச்சி அடைந்துள்ளது..இரண்டு மாதங்களில் 350 கிராம் அளவில் அறுவடை செய்யவதற்கு தயாராக இருக்கும். இருப்பினும் தொடர் மழை காரணமாக இந்த மீன்களை மேலும் 3 மாதங்களின் பின்னரே அறுவடை செய்ய முடியும்.

தற்போது பெய்து வருகின்ற மழையின் காரணமாக குளத்தில் 17 அடி நீர் தேங்கி உள்ளது.  தற்போது மீன் பிடிபடுகின்ற அளவு குறைவடைந்துள்ளது. நாளாந்தம் 10 – 15 நபர்கள் தொழிலை மேற்கொள்ளுகின்றபோதும் 120 கிலோவிற்கும் குறைந்த அளவில் மட்டுமே மீன்பிடிபடுகின்றது.  குளத்தின் நீரேந்து பகுதி காடாக இருப்பதால் அனைத்து மீன்களும் காட்டிற்குள் சென்றுள்ளது. மழை குறைவடைந்ததன் பின்னரே மீன்கள் மீன்டும் குளத்தின் ஆழமான பகுதியை நேக்கி திரும்பும் அதுவரையிலும் மீனவர்கள் காத்திருக்க வேண்டும்.

2021 ஆண்டு ஏப்ரல் 20ம் திகதிக்கு பின்னரே அதிக அளவில் மீன்பிடிபடுவதற்கான  வாய்ப்புகள்  உள்ளது. தொடர்ந்து மழை பெய்வதால் இந்த வருடம் மீன் பிடிப்பதற்கான காலம் மேலும் ஒரு மாதாங்கள் நீடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இடைப்போகம் வேளான்மை செய்கைக்காக குளத்தில் இருந்து நீர் திறந்து பாவிக்கின்றபோது குளத்தின் நிர் அளவு குறைவடைந்தால் மாத்திரமே காட்டிற்குள் உள்ள மீன்கள் குளத்தை நோக்கி திரும்பும். அதுவரையிலும் மீனவர்கள் முழுமையாக தங்களது தொழிலை மேற்கொள் முடியாது.

தற்போது விடப்பட்ட மீன்குஞ்சுகளை மீனவ சங்கம் மற்றும் மீன்பிடி திணைக்களம் அவதானித்து வருகின்றது.

2021 தொடக்கம் மீனவர் சங்கத்தின் கொள்ளளவு விருத்தி தொடர்பாக கவனம் செலுத்;துவதாக திட்டமிடப்பட்டிருந்தாலும் எமது பிரதேசத்தில் ஒருவருக்கு கொரேனா உறுதிப்படுத்தப்பட்டு அந்த குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், கூட்டம் கூடுவதற்கான அனுமதி தொடர்ந்தும் இடைநிறுத்தப்படுள்ளது. கடந்த வெள்ளிக் கிழமை 29.01.2021 யில் மீனவர் சங்க கூட்டம் நடாத்துவதற்கான திடம் இருந்தபோதும் கூட்டத்தை நடாத்துவதற்கு பிரதேச செயலாளர் அனுமதி வழங்காததால் தொடர்ந்து தற்காலிகமாக அனைத்து செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

சங்கத்தின் வழமையான செயற்பாடுகள் இந்த வருடம் பாதிப்படைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

50 வயது பூர்தியாகி தொழிலில் இருந்து ஓய்வு பெறுகின்றவர்களுக்கு ஒரு தொகை நிதி (50,000) வழங்கப்படுவது வழமை. கடந்த வருட இறுதியில் 50 வயது பூரத்தியாகியும் இந்த நிதியை பெற்றுக்கொள்ளாமல் நான்கு உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்.

பழைய உறுப்பினர்கள் ஓய்வு பெறுகின்றபோது ஓய்வு பெறுகின்ற நபரின் குடும்ப உறுப்பினர்கள் 18 வயதை பூர்தியடைந்திருப்பின் அவர்களுக்கு மீன்பிடிப்பதற்கான அனுமதிகள் வழங்கப்படும்.

சங்கத்திற்கு புதிய உறுப்பினர்களை இணைத்துக்கொள்வது தொடர்பான விசேட அனுகுமுறைகளை மேற்கொள்தல்.

கிராமத்து மீனவர்கள் பாதுகாத்தல் மற்றும் மீன்பிடிசார்ந்த தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தல் தொடர்பான விசேட அனுகுமுறைகளை உருவாக்குதல்.

மீனுக்கான பெருமதிசேர் திட்டத்தை உருவாக்குதல்.

போன்ற மேற்படி செயற்திட்டங்களை உருவாக்குவதில் தொடரந்து பின்னடைவுகளையே சந்திக்கின்றோம். கொரோனா தாக்கம் காரணமாக சதாரண சந்திப்புகளையேனும் ஏற்படுத்த முடியாத வகையில் பிரதேச செயலாளர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

 

நன்றி

Yours faithfully,

Rasalingam Vigneswaran

DIRECTOR

PLEDGE TO RESTORE FOUNDATION

+94 77 307 5998