Saturday - Sunday: 10:00AM - 4:00PM info@pledgetorestore.org
8 Apr 2021

Copied from Mathurahan Selvarajah

எதிர்காலத்திற்கான வளங்களைத் தக்க வைப்பதற்கான எமது போராட்டத்தின் நடுவில் இதைப்பற்றிய விளக்கங்களை எதிர்பார்ப்பவர்களுக்கான பதிவு ஒன்று.
வவுனியாக் குளத்தினைப் பாதுகாப்பதற்கான போராட்டங்களை முன்னெடுக்கும்போது அதனை நீருக்கான/ இயற்கை வளங்களுக்கான போராட்டத்தின் முதற்படியாகப் பார்ப்பதற்குப் பதில் அரசியலுக்கான முதற்படி எனச் சாயம் பூசச் சிலர் முயல்கின்றனர்.

எந்தவிதமான தனிப்பட்ட நலனுமின்றி ஒரு பொது நன்மைக்காக இளைஞர்கள் ஒன்றுபடுவார்கள் என்பதை அவர்களால் நம்பவும் இயலவில்லை. தங்களைப் போலவே அனைவரும் இருப்பார்கள் என்ற எண்ணத்தின் வெளிப்பாடு அது.

இன்னுமொரு சாரார் எங்களுக்கு ஏன் வீண் வம்பு நாங்கள் எங்கள் பாட்டுக்கு லீட்டர் 5 ரூபாய்க்குத் தண்ணீர் வாங்கிக் குடித்துக்கொண்டு கிடைக்கும் தண்ணீரில் குளித்துக்கொண்டு வாழ்ந்து விடலாம் என்று பார்வையாளர்களாக இருப்பவர்கள். இந்த இரு தரப்புக்கும் எங்களது போராட்டத்தின் நோக்கம் பொது நலமல்ல, சுயநலம் தான், தண்ணீருக்கான சுயநலம்தான்..
அந்த சுயநலத்தின் பின்னணி இதுதான் என்று கோடுபோட்டுக்காட்டுவதுவும் இதன் நோக்கம்.

ஆரம்பத்திலேயே விழிப்புணர்வுடன் இருக்காவிட்டால் நீர்த்தட்டுப்பாட்டின் உச்சம் எப்படி இருக்கும் என்று விளங்கிக்கொள்ள Day Zero என்றால் என்ன என்று தேடிப்பாருங்கள்.
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரத்தின் தொடர் மழையின்மை, நிலத்திற்கு மேலான நீரின் சீரற்ற மேலாண்மை, அளவுக்கு அதிகமான நிலத்தடி நீரின் அகத்துறிஞ்சல் காரணமாக ஒரு சொட்டு நீருமில்லாத நாள் ஏற்படும் என்பதை உணர்ந்து கொண்டு, இருக்கும் நீரின் அளவைக் கொண்டு நீர் முற்றாக இல்லாமல் போகும் நாளைக் கணித்தார்கள் அதுவே Day Zero.
அந்த நாளை நெருங்க ஆறு மாதங்களுக்கு முன்பே மக்களுக்கு நீர்க்கட்டு பண்பாடு விதிக்கப்பட்டது.

ஒரு தனிநபருக்கு அனுமதிக்கப்பட்ட ஆகக்கூடிய நீரின் அளவு 50 லீற்றர்களாக.
50 லீற்றரில் என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்.

சராசரியாக ஒரு மனிதன் Shower இல் குளிக்கும்போது 50 லீற்றர் தண்ணீர் விரயமாகுமாம்.
ஒருமுறை மேற்கத்திய மலசலகூடம் Flush செய்யப்பட 8 லீற்றராவது தண்ணீர் தேவை.
ஒரு வாளி (20 லீற்றர்) துணி துவைக்கும் போது மூன்று மடங்கு நீர் தேவை. இதைவிட சமைக்க, பாத்திரங்கள் கழுவ, தோட்டத்திற்கு நீர்விட வாகனங்கள் கழுவ நினைத்துப் பார்க்கமுடிகிறதா?

அதுவும் கொறோனா காலத்தில் நொடிக்கு நொடி கைகழுவ நேர்ந்திருந்தால் கேட்கவும் வேண்டாம். இதற்கே ஏங்கிவிட வேண்டாம். Day Zero என்ற ஒன்று ஏற்பட்டிருந்தால் அந்த நாளில் இருந்து ஒருவருக்கு 25 லீற்றர் மட்டுமே என்று வரையறுக்கப்பட்டிருந்தது. என்றால் 5 லீ தண்ணீர்ப் போத்தலில் 5 மட்டுமே அனைத்துத் தேவைக்கும் அதுவும் நீர்க்குழாயில் வராது. நகரில் உள்ள 200 நிலையங்களில் வரிசையில் நின்று பெற்றுக்கொள்ளவேண்டும்.

ஒரு லீற்றர் தண்ணீரை வீணாக்கினால் கிட்டத்தட்ட 50,000 ரூபா அபராதம். வாகனங்கள் கழுவுதல் முற்றாகத் தடை. நீச்சல் குளங்கள் முற்றாகத் தடை. பணம் இருக்கிறது என்று வேறு நகரங்களில் இருந்து நீரை விலைக்கு வாங்கிப் பயன்படுத்த யாரும் எண்ணினால் அதுவும் 50 லீற்றர்களுக்கு மேல் பயன்படுத்த முடியாது. வீட்டுத்தோட்டம் செய்பவர்கள் கழிவு நீரை மாத்திரம் நீர் பாய்ச்சலுக்குப் பயன்படுத்தலாம். விவசாய நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட்டன.

இப்படியான ஒரு வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவும் முடிகிறதா ?
வினைத்திறனான நீர் மேலாண்மை, பொதுமக்கள் விழிப்புணர்வுடன் நீர் வீண்விரயத்தைத் தவிர்த்தமை. இயற்கை இணங்கிப் பெய்த மழை என்பவற்றால் Day Zero இன்னமும் ஏற்படாமல் அந்த நகரம் பாலைவனமாகாமல் காக்கப்பட்டு வருகிறது.

எங்கேயோ தென்னாப்பிரிக்காவில் உள்ள நீர்ப்பிரச்சினைக்கும் எங்களுக்கும் என்ன தொடர்பு நாங்கள் கிணறு நிறையத் தண்ணீருடன் வாழ்கின்றோம் என்று நினைக்கிறீர்களா?
எங்களுக்கு மிக அருகில் எங்களுக்குச் சமமான அல்லது எங்களை விட அதிகமாக நீர்வளத்தைக் கொண்டிருந்த சென்னை இதே Day Zero வை எதிர்கொள்ளலாம் என எதிர்வு கூறல் ஆரம்பித்து விட்டது.

கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் சென்னையில் மேற்பரப்பு நீரின் விகிதம் 80% ஆகும்.
அபிவிருத்தி நேசர்களின் கரங்கள் தீண்டிய நேரம் மக்கள் தொகை அதிகரிப்பும் சேர்ந்துகொள்ள ஏரிகள் அனைத்தும் குடிமனைகளாகின, ஆறுகளின் கரைகளும் ஆக்கிரமிக்கப்பட்டன.
சென்னை என்ன தண்ணியில்லாக் காடு என்று நினைக்கிறீர்களா?

கொஞ்சம் கூட மழை பொழிந்தால் வெள்ள நீர் செல்ல வழியின்றி வீடுகளுக்குள் வரும். (எல்லா ஏரிகளும் குளங்களும் வீடுகளானதன் விளைவு).
நீர்நிலைகள் இல்லாததால் வெப்பம் அதிகரிப்பு, நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக நுகர்ந்து அது நூற்றுக்கணக்கான அடிகள் கீழே சென்றுவிட்டது. குப்பைகள் கொட்டப்பட்டு மீதமிருக்கும் ஆறு/ஏரிகளும் சாக்கடையாகி Day Zero வை நோக்கி அடியெடுத்து வைக்கிறது சென்னை.

இங்கே இருக்கிற யாழ்ப்பாணம், கடந்த மாரியில் பெய்த மழையின் பின்புதான் காணாமல் போன நூற்றுக்கணக்கான குளங்கள் வெளிப்பட்டன, வெள்ள நீராக.
குடிநீருக்காக இரணைமடுத் தண்ணீர் பிரச்சினை கர்நாடக-தமிழ்நாடு காவிரிப் பிரச்சினை போல நீள்கிறது. சரி அதற்காக இரண்டு ஏக்கர் குளப்பரப்புத்தானே போயிருக்கிறது என்று நினைத்தால், முதலில் இரண்டு ஏக்கர்தான் போகும் விஸ்தரிப்பு நோக்கில் அதுவே இருபதாகும் (ஏற்கனவே விஸ்தரிப்பு ஆரம்பமாகி விட்டது அனுமதி கொடுத்த நீர்ப்பாசனத் திணைக்களமோ நகரசபையோ மேலதிகமாக ஆக்கிரமிக்கப்படுவதை தடுக்க இயலவில்லை என்று கைவிரித்து விட்டனர்) இதைப்பார்த்து இன்னும் ஓரிரு வேறு மையங்களும் முளைக்கலாம்.

ஏன் இதைப்பற்றி மட்டுமே கதைக்கிறீர்கள், குளத்தின் மற்றைய பக்கங்கள் தனிப்பட்ட நபர்களால் நிரப்பப்படுவதை ஏன் கதைக்கவில்லை என்று கேட்டால், நாங்கள் அதைப் பற்றியும் பேசுகிறோம் ஆவணங்கள் சேகரிக்கிறோம்.

மற்றைய குளங்களும் இல்லாமல் போகிறதே, நீங்கள் அதைப்பற்றியும் கதைப்பீர்களா என்று கேட்டால், இது முதல் படிதான் நீங்களும் எங்களுடன் சேரும்போது எங்கள் தேடல் இன்னும் பெரிதாகும். எங்களைப்போல இன்னும் பலர் தங்கள் ஊர்களின் குளங்களைப் பாதுகாக்க முன்வருவார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அனைத்துக் குளங்கள் பற்றியும் விழிப்புணர்வு பெருகும்.

வவுனியாவில் 750க்கு மேல் குளங்கள் இருக்கு ஒரு குளம் அபிவிருத்திக்காகப் போனால் என்ன என்று கேட்கும் மூடர்கள் தொகுதிக் குளமொன்றில் ஒரு குளம் இல்லாமல் போனால் அந்தத் தொகுதியின் தொடர்ச்சியின்றி எண்ணற்ற குளங்கள் பாதிக்கப்படும் என்ற விளக்கம் இல்லையா ?

ஏன் இவ்வளவு நாள் பேசாமல் இருந்தீர்கள் என்று கேட்காதீர்கள் இப்போதாவது பேசுகிறோம் என்று ஊக்குவியுங்கள். நாங்கள் உங்கள் பிள்ளைகள் / பேரப்பிள்ளைகளுக்கும் சேர்த்துத்தான் போராடுகிறோம்.

Copied from Mathurahan Selvarajah